ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் என்னதான் கட்சிகள் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்களாக அறிவித்தாலும் உள்ளூர் 'தலைகளான' ஜெயக்குமார், சேகர்பாபு மற்றும் வெற்றிவேல் இடையேயான யாருக்கு பலம் என்கிற போட்டிதான் கள யதார்த்தம்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு திமுகவின் மருது கணேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஜெயலலிதாவை எதிர்த்து இதே தொகுதியில் போட்டியிட்டு தோற்ற சிம்லா முத்துசோழன் மீண்டும் வேட்பாளர் வாய்ப்புக்கு முயற்சித்தார்.
ஆனால் அது கைகூடவில்லை. சாமானிய வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருது கணேஷை வெற்றி பெற வைக்க வேண்டிய பெரும் பொறுப்பு சேகர்பாபுவுக்கு இருக்கிறது. இதில் சேகர்பாபு எந்தளவுக்கு ஈடுபாட்டுடன் இருக்கப் போகிறார் என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.ஏனெனில் அதிமுகவில் இரட்டை இலையுடன் களமிறங்கப் போகும் மதுசூதனன், சேகர்பாபுவின் உறவினர் என்பதால்தான். அதிமுகவைப் பொறுத்தவரையில் இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டதால் மதுசூதனன் மீண்டும் போட்டியிட விரும்புகிறார். ஒருகாலத்தில் இத்தொகுதியில் ராஜாவாக வலம் வந்தவர் மதுசூதனன். அதனால்தான் மதுசூதனனை ஓபிஎஸ் அணி கடந்த முறை வேட்பாளராக களமிறக்கியது. இம்முறை இரட்டை இலையுடன் இறங்கினால் எப்படியும் வெல்லலாம் என்பது மதுசூதனனின் கணக்கு. இதனால் முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோரை சந்தித்து பேசியிருக்கிறார் மதுசூதனன்.
ஆனால் இதே தொகுதியில் மதுசூதனனுடன் மல்லுக்கட்டுகிறவர் அமைச்சர் ஜெயக்குமார். மதுசூதனன் வேட்பாளராக நின்றால் அவரை வீழ்த்த ஜெயக்குமார் ஒருவரே போதும் என்கிற அளவுக்கு பேச்சுகள் இருக்கிறது. எப்படியும் மதுசூதனனை நிறுத்தவிடக் கூடாது என்கிற ஒரு லாபியும் எடப்பாடி அணியில் மும்முரமாக இருக்கிறது. ஆகையால்தான் மதுசூதனன் சந்தித்த போது முதல்வர் எடப்பாடியார் பேசி முடிவெடுக்கலாம் என்று மட்டும் கூறிவிட்டு பிடி கொடுக்காமல் நழுவியிருக்கிறார்.
சேகர் பாபு, மதுசூதனன், ஜெயக்குமாருக்கு சமமாக இதே தொகுதியில் சவால்விடக் கூடியவர் தினகரன் அணியின் வெற்றிவேல். இத்தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்து ஜெயலலிதாவுக்காக ராஜினாமா செய்தவர். இரட்டை இலையே இருந்தாலும் அதை வீழ்த்தும் வல்லமை தங்களிடம் இருக்கிறது என்கிற தினகரனின் சவாலை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் வெற்றிவேல் இருக்கிறார்.
According to the ground reality that the real fight between Jayakumar, Sekhar babu and Vetrivel in the RK nagar by poll.