ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடயுள்ள நடிகர் விஷால், மனுத்தாக்கலுக்கு முன்னதாக காமராஜர், எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது. களத்தில் பல கட்சிகள் இருந்தாலும் தொகுதி மக்களுக்கு ஏற்கனவே நன்கு பரிச்சயமான வேட்பாளர்களாக, தி.மு.க சார்பில் மருதுகணேஷ், அ.தி.மு.க சார்பில் மதுசூதனன், அ.தி.மு.க அம்மா அணி சார்பில் டி.டி.வி தினகரன் ஆகியோர் களத்தில் இருப்பதால் மும்முனை போட்டியாக கருதப்படுகிறது
இந்நிலையில், நடிகர் விஷால் ஆர்.கே. நகரில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இன்று வேட்புமனுத்தாக்கலுக்கான கடைசி நாளில் மனுத்தாக்கலும் செய்ய இருக்கிறார். இதனால், ஆர்.கே. நகர் தேர்தல் சூடுபிடித்துள்ளது. காலையில் தி.நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஷால், பின்பு ராமபுரம் எம்.ஜி.ஆர் இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, தான் யாருக்கும் போட்டியாகவோ, ஓட்டுகளைப் பிரிக்கவோ தேர்தலில் இறங்கவில்லை என்றும், மக்கள் பிரதிநிதியாகவே களத்தில் இறங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஆர்.கே நகரில் இதுவரை எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை அதைப்பார்த்து மனம் வருந்தியே தான் தேர்தலில் நிற்பதாகவும் விஷால் தெரிவித்து உள்ளார். மக்கள் அடிப்படை வசதிகளைத் தான் கேட்கிறார்கள்; அதைச் செய்து தரவே நான் வேட்பாளராகி உள்ளேன். மேலும், தன்னுடைய இந்த முடிவுக்குப் பின்னால் யாரும் இல்லை என்றும், தன்னைய் யாரும் இயக்கவில்லை என்றும் விஷால் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் மரியாதை செலுத்திவிட்டு ஆர்.கே நகரில் மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.