பதிநான்கு வருட சினிமா வாழ்க்கையில் இதுவரை ஒரு சில படங்கள் மட்டுமே சுமாருக்கு சற்று மேலாக அமைந்திருக்க, சூப்பர் ஹிட் என்று கூறும் அளவிற்கு சிபி ராஜூக்கு எந்தப் படமுமே அமையவில்லை. ஆக்சன், காமெடி, ஹாரர் என அனைத்து வகைப் படங்களுமே முயற்சித்திருக்கிறார். ஹீரோ, வில்லன், சைடு ரோல் என அனைத்து கதாப்பாத்திரங்களையும் முயற்சித்திருக்கிறார். ஆனால் இன்று வரை ஒரு முறையான பிடிமானம் எதிலுமே அமையவில்லை. இந்த நிலையில் சிபிராஜின் அடுத்த தெரிவு சஸ்பென்ஸ் த்ரில்லர். தெலுங்கில் புதுமுகங்களை வைத்து குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, மிகப்பெரிய வெற்றி பெற்ற க்ஷணம் என்ற திரைப்படத்தின் ரீமேக் உரிமையைப் பெற்று, தாயாரித்து நடித்து சத்யா என்ற பெயரில் வெளியிடவிருக்கிறார். இந்தத் திரைப்படமாவது சிபிராஜூக்கு கைகொடுக்குமா? அமெரிக்காவில் பணிபுரியும் கதாநாயகன் திடீரென தனது முந்நாள் காதலியிடமிருந்து அழைப்பு வர, அவளைப் பார்க்க இந்தியா விரைகிறான். அவளைச் சந்திக்கும்போது, அவளுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதும், அது காணாமல் போயிருப்பதும் தெரியவருகிறது. தனது குழந்தையை கண்டுபிடிக்க நாயகனிடம் உதவி கேட்கிறாள். அதன்பிறகு குழந்தையைத் தேடும் பணியில் நாயகன் ஈடுபட, கதையில் பல்வேறு திருப்பங்கள் ஏற்படுகின்றன. நாயகியின் கணவன் உட்பட பல்வேறு நபர்களைச் சந்தித்து விசாரிக்கிறான். இப்படி போய்க்கொண்டிருக்கும் போதே இடைவேளையில் சற்றும் எதிர்பாராத ஒரு சம்பவம்.
A preview on Sibiraj's upcoming thriller Sathya.