குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மலை கிராமங்களில் மின் கம்பங்களை சீரமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. பணிகளை விரைவுபடுத்த மின்துறை உயர் அலுவலர்கள் அப்பகுதிகளில் முகாமிட்டு பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகின்றனர். ஓகி புயல் பாதிப்பிற்குப் பின்னர் கன்னியாகுமரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மின் சீரமைப்பு பணிகள் குறித்து குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது : குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட ஓகி புயலால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்து மின்சார விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மின்சார விநியோக சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. புயலால் சேதமடைந்த 13,469 மின்கம்பங்களில் 13,264 மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும் சேதமடைந்த 802 கி.மீ நீளமுள்ள மின்கம்பிகளில் 795 கி.மீ. நீளமுள்ள மின்கம்பிகள் சீரமைக்கப்பட்டன. தீவிர நடவடிக்கைகளால் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிப்பகுதிகள் மற்றும் 55 பேரூராட்சிகளிலும் 100 சதவீதம் மின்சீரமைப்பு பணிகள் நிறைவுற்றுள்ளது. மேலும், 95 ஊராட்சிகளில் 90 ஊராட்சிகளுக்கு முழுவதுமாக மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 ஊராட்சிகளில் உள்ள மலை பகுதியில் மின்பாதை முழுவதும் மிகுந்த சேதமடைந்துள்ளது. இதனால் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 1,200 மின் பணியாளர்களுடன் குமரி மாவட்ட மின்பணியாளர்கள் இணைந்து மின் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகளை விரைவுபடுத்த மின்துறை உயர் அலுவலர்கள் அப்பகுதிகளில் முகாமிட்டு பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Kanyakumari district Collector released a statement of electricity works status in Ockhi affected hilly areas and he assures the works were in full progress.