ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட தீரன் பெரிய பாண்டியனின் உடல் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் கதறல்களுக்கு மத்தியில் அவரது சொந்த கிராமமான மூவிருந்தாளி சாலைப்புதூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சென்னை நகைக்கடையில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற தனிப்படையில் இருந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் அங்கு கொள்ளையர்களுக்கும், போலீஸாருக்குமான துப்பாக்கிச்சூட்டில் பலியானார். ஜோத்பூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு முடிந்து சென்னைக்கு விமானத்தின் மூலம் பெரியபாண்டியன் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் பெரியபாண்டியன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. காவல்துறையின் உரிய மரியாதைக்குப் பிறகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பெரிய பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து பெரிய பாண்டியன் உடல் மதுரைக்கு அனுப்பப்பட்டது. அங்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், ஐ.ஜி சைலேஷ் குமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தியனர். பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அங்கிருந்து வேன் மூலம் சங்கரன்கோவில் அருகே உள்ள மூவிருந்தாளி சாலைப் புதூருக்கு கொண்டு செல்லப்பட்டது.
Lot of people Paid Final Tribute to Inpsector Periyapandiyan who di@d in Rajasthan burgler gun fight