வெள்ளிக்கிழமை வெளியான அருவி படம் விமர்சகர்கள், சமூக வலைத்தள பயனாளர்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அருவி படம் பார்த்து குளமான கண்களுடன் தியேட்டரிலிருந்து வெளிவந்தோம் என பதிவு செய்யாதவர்கள் குறைவுதான். புதுமுகங்கள் நடித்துள்ள இப்படம் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. திரைக்கதை வசனம் எழுதி புதியவர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ளார்.
வாழ்க்கையை சுவரசியமாகவும் சுவையாகவும் அனுபவித்து வாழும் இளம் மாணவியாக கதாநாயகி அதிதி பாலன், அவரது ஒழுக்கத்தில் சந்தேகப்படும் பெற்றோரால் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார். வாழ்க்கையை தனி மனுஷியாக எதிர்கொள்ள தொடங்கும் நாயகி சந்திக்கும் பிரச்சினைகள், அவற்றை அவர் கடந்து போகும் போது அரசு எந்திரம், ஊடகங்கள், என்ன கோமாளித்தனங்களை கடைப்பிடிக்கின்றன என்பதை சமரசமின்றி பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.
உள்ளுர் அரசியல் பேசினாலே படம் எடுக்க தயங்கும் தயாரிப்பாளர்கள், தொடை நடுங்கி இயக்குநர்களும் உண்டு. விபத்து ஒன்றில் எய்ட்ஸ் கிருமிகள் தொற்றுக்கு உள்ளாகும் நாயகி இந்த ஒரு வரி கதையைக் கடந்து போகும் வரை கதாபாத்திரங்கள் மூலம் இயக்குநர் தமிழக அரசியல், இந்திய அரசியல், உலக அரசியல் எதையும் விட்டு வைக்கவில்லை. உலக பணக்காரர்களின் விருப்பத்திற்கிணங்க நாம் வாழ்வதும், அதற்காக உழைக்கும் அடிமைகளாக இந்தியர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள் என்பதையும் பொட்டிலடித்த மாதிரி சொல்லியிருக்கிறார்.
Debutant Director Arun Prabhu's Aruvi movie is getting good response from audience