ரஜினி அரசியலுக்கு வரலாம். ஆனால் ஏற்றுக்கொள்ளலாமா, வேண்டாமா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பில்லா, ரங்காதான் இனிமேல் அரசியலில் ஈடுபட முடியும் என்றும் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது அவர், தனது அரசியல் பிரவேசம் குறித்து 31ஆம் தேதியன்று அறிவிப்பதாக கூறினார்.
ரஜினியின் இந்த அறிவிப்பு குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து கூறி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரோ, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று கூறி முடித்துக்கொண்டார்.
ஆர்.கே. நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது குறித்து காட்டமாக விமர்சித்துக்கொண்டிருந்தார் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுகவில் இருந்து ஒரு செங்கலை கூட யாராலும் அசைக்க முடியாது என்றும் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் தான் தினகரன் வெற்றி பெற்றுள்ளார் எனவும் ஜெயக்குமார் கூறினார். இனிமேல் பில்லா, ரங்காதான் அரசியலில் ஈடுபட முடியும் என்று கூறினார். மக்கள் ஏற்பார்களா? ரஜினிகாந்த் அரசியலுக்கு வரலாம். அதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் ரஜினியை ஏற்றுக்கொள்ளலாமா, வேண்டாமா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்றும் ஜெயக்குமார் கூறினார். எஸ்.வி சேகர் கருத்து ரஜினி எம்.எல்.ஏ ஆகலாம், ஆனால் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை அவருக்கு வரக்கூடாது என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். ரஜினியை பாஜக அரசியலில் பயன்படுத்தி கொள்ளுமா என்பது குறித்து அமித் ஷா தான் முடிவு செய்வார் என அவர் கூறியுள்ளார்.