திமுக- அதிமுகவுக்கு மாற்றாக ரஜினிகாந்தை முன்வைத்து களமிறங்கும் பாஜகவின் வியூகம் சாகசமாக சாதிக்குமா? அல்லது சர்க்கஸ் போல வேடிக்கை காட்சியாகிவிடுமா? என்பது பெரும் எதிர்பார்ப்பு. இந்தியாவில் பெரும்பான்மையான மாநிலங்களில் ஆளும் கட்சியை உடைத்து விலைக்கு வாங்கி அந்த பிரமுகர்கள் மூலம் தேர்தலை சந்திக்கும் 'வாடகை' அரசியலைத்தான் பாஜக கையாண்டு வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் இந்த வாடகை அரசியல் வியூகம் நன்றாகவே பாஜகவுக்கு கை கொடுத்தது.
ஆனால் தென்னிந்தியாவில் இது பல்லிளித்துதான் போனது. கேரளாவில் ஈழவர் சமூகத்தின் வெள்ளாபள்ளி நடேசனை கட்சி தொடங்க வைத்தது பாஜக. இடதுசாரிகளின் வாக்கு வங்கியாக இருந்து வரும் ஈழவர் சமூகத்தை தங்கள் பக்கம் ஈர்த்துவிடலாம் என கணக்குப் போட்டு பார்த்தது பாஜக.
அத்துடன் அமிர்தானந்தமாயி சீடர்களை முழுவீச்சில் களமிறக்கிப் பார்த்தது. கேரளா சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு அது கை கொடுக்கவில்லை. குஜராத்திலும் காங்கிரஸில் இருந்த வகேலாவை வெளியேற்றி தனிக்கட்சி தொடங்க வைத்தது பாஜக. ஆனால் அங்கு பாஜகவின் வாக்கு வங்கிகளாக இருந்த பட்டேல்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் என கணிசமானோர் காங்கிரஸுக்கு தாவிவிட்டனர். இதனால் நூலிழையில்தான் குஜராத்தில் வெல்ல முடிந்தது.
Political analysts are raising doubts over the success of BJP's Operation Rajinikanth for Tamilnadu.