மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவார்களா மாட்டார்களா என்பதை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து 2014ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து இந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகிய 4 பேரையும் சேர்த்து மொத்தம் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது.
இந்த வழக்கின் புலன் விசாரணையை சி.பி.ஐ. மேற்கொண்ட காரணத்தால், மாநில அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தும் முன் மத்திய அரசுடன் கலந்தாலோசிப்பது அவசியமாகும். எனவே மத்திய அரசின் கருத்தை கேட்டு பிப்ரவரி 19ம் தேதியே, தமிழக அரசு கடிதம் அனுப்பியது. மத்திய அரசின் கருத்தை 3 தினங்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டிருந்தது.
னினும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பான தனது கருத்தை தெரிவிப்பதற்கு பதிலாக, தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அதே ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரத்தில் விடை காண வேண்டிய சட்டரீதியான 7 கேள்விகளை முன்வைத்தது.