ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிகள் ராஜினாமா முடிவு... முற்றும் ஆந்திரா சிறப்பு அந்தஸ்து விவகாரம்!
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி எம்பிகள் ராஜினாமா செய்வார்கள் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.
டெல்லி : ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் அளித்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அடுத்தகட்டமாக ராஜினாமா முடிவை அறிவித்துள்ளது.
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி அந்த மாநில அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற பட்ஜெட் 2வது கூட்டத்தொடர் முழுவதையும் எம்பிகள் முடக்கியும் வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதா வேண்டாமா என்று சபாநாயகர் முடிவை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி அடுத்தகட்ட நடவடிக்கையாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்பிகள் அனைவரும் ராஜினாமா செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கடைசி நாள் கூட்டத்தில் எம்பிகள் ராஜினாமா கடிதத்தை அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.