மீனவர்களுக்கு மானிய டீசல் வழங்காத மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து வருகின்ற 10ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று நாகை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீன்பிடி தடைகாலம் முடிந்து கடந்த 14 ம் தேதி விதிகளை மீறி முன்கூட்டியே கடலுக்கு மீன்பிடிக்க சென்றதாக நாகை மீனவர்களின் 340 விசைப்படகுகளுக்கு மீன்வளத்துறை அபராதம் விதித்து, மானிய டீசலை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் 340 விசைப்படகுகளுக்கு தேவையான மானிய டீசல் கிடைக்காமல் மீனவர்கள் தொழிலுக்கு செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து, கீச்சாங்குப்பம் துறைமுகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக டீசல் விற்பனை நிலையத்திற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நாகை அக்கரைபேட்டையில் நாகை தாலுக்கா மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மீனவர்கள் மீது தொடர்ந்து பொய் வழக்கு பதிவு செய்யும் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், மீன்வளத்துறையை கண்டிக்கும் வகையில் வருகின்ற 10ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களையும் திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் அறிவித்துள்ளனர்.