அரக்கோணம் அருகே மண் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி வாகனங்களை பறிமுதல் செய்யவந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் மீது 5 பேர் கொண்ட கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு..
வேலூர் மாவட்டம் பள்ளியாங்குப்பம் பகுதியில் சிலர் அனுமதியின்றி ஜே.சி.பி. மற்றும் லாரிகளால் மண் அள்ளுவதாக கிடைத்த தகவலையொட்டி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் மற்றும் அவரது உதவியாளர் மீது மண் கடத்தும் கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தி அங்கிருந்து தப்பி சென்றனர். படுகாயம் அடைந்த இருவரை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த ராணிப்பேட்டை கோட்டாச்சியர் வேணுசேகர் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சைபெற்று வரும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாரை நேரில் சந்தித்து நடந்ததை கேட்டு அறிந்தார் இது குறித்து அரக்கோணம் கிராமிய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். கடந்த வாரத்தில் மணல் கடத்தலை தடுக்க சென்ற தக்கோலம் காவல் நிலைய துணை ஆய்வாளர் பழனி தாக்கப்பட்ட நிலையில் தற்போது கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் தாக்கப்பட்ட சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.