இந்திய அஞ்சல் துறை வங்கித்துறையில் கால்பதிக்கும் வகையில் இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கி என்ற பெயரில், அஞ்சல் வங்கி சேவை திட்டத்தை தொடங்க மத்திய அரசு தீர்மானித்தது. அதன்படி டெல்லியில் உள்ள டல்காட்டோரா விளையாட்டு அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, திட்டத்தை தொடங்கி வைத்தார். அதேநேரத்தில் நாடு முழுவதும் உள்ள 650 அஞ்சலகங்களில் மத்திய அமைச்சர்கள் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்த திட்டத்தில் கணக்கை தொடங்க விரும்புபவர்கள் தங்கள் பகுதி தபால்காரர்களை வரவழைத்து தங்கள் வீட்டில் இருந்தபடியே கணக்கை தொடங்கலாம். கணக்கை தொடங்கியவர்கள் கணக்கில் இருக்கும் பணத்தைப்பெற வங்கியை நாடிச்செல்ல வேண்டியதில்லை. தபால்காரர்களை வீட்டுக்கு அழைத்து அவர் மூலமாகவே பணமும் பெற்றுக் கொள்ளலாம். வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து 55 ஆயிரம் அஞ்சலகங்களில் இந்த இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கி திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.