கென்யாவில் நடைபெற்ற சர்வதேச இறகுபந்து போட்டியில் இந்தியா சார்பில் போட்டியிட்டு தங்க பதக்கம் வென்று சென்னை திரும்பிய இரண்டு போட்டியாளர்களுக்கும் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு. இறகுபந்து விளையாட்டாளர்களுக்கு மத்திய மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை.
சென்னயை சேர்ந்த கல்லூரி மாணவர் சந்தோஷ் மற்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்த கதிரவன் ஆகியோர் கென்யா நாட்டில் நடைபெற்ற சர்வதேச இறகுபந்து போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளனர். கடந்த 27 முதல் 1 ம் தேதி வரை கென்யா நாட்டில் நடைபெற்ற "கென்யா இண்டர்னேஷ்னல் பேட்மிண்டன் டோர்னமெண்ட்" என்ற சர்வதேச இறகுபந்து போட்டியில் சீனியர் ஆண்கள் இரட்டையர் பிரிவில் போட்டியிட்ட சந்தோஷ் மற்றும் கதிரவன் முதலிடத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்றனர். சென்னை திரும்பிய இவர்களுக்கு விமான நிலையத்தில் உறவினர்களும் பெற்றோர்களும் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.
பின்னர் பேட்டியளித்த இருவரும்: இந்தியா சார்பில் போட்டியிட்டு தங்கம் வென்றது பெருமையாக உள்ளது என்றும், மத்திய மாநில அரசுகள் போதிய நிதியுதவி செய்தால் இறகுபந்து போட்டியாளர்கள் மேலும் பல சாதனை புறிவார்கள் என்றும் தெரிவித்தனர்.