பெரிய தலைவர்கள், பிரபலங்கள் யாரேனும் மறைந்துவிட்டால், அவர்களின் உடலை அழுகிப் போகாமல் பாதுகாக்கப் பதப்படுத்தி வைக்கும் 'எம்பாமிங்' (Embalming) எனும் முறையைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் எகிப்தியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இறந்தவர்களின் உடலைப் பதப்படுத்தி பிரமிடில் வைத்துப் பாதுகாத்து வருவது நம் அனைவருக்கும் தெரியும். எத்தனை 'மம்மி' படம் பார்த்திருப்போம்? எகிப்தில் தற்பொழுது இறப்பவர்களின் உடலை பிரமிடில் வைக்கவில்லை என்றாலும், உடலைப் பதப்படுத்தி புதைக்கும் வழக்கத்தை இன்றுவரை கடைப்பிடித்து வருகிறார்கள். மம்மிக்கள் குறித்து சமீபத்தில் ஆய்வு செய்த ஸ்டீபன் பக்லி தலைமையிலான சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு, பண்டைய கால மம்மிக்களை எந்தெந்தப் பொருள்களை வைத்து உருவாக்கினார்கள் என்ற பட்டியலை கண்டுபிடித்துள்ளார்கள்.