#cithiraitv #என்னுடைய வாழ்க்கையில் நீ எதையாவது சாதித்திருக்கிறாயா என்று கேட்டால், பட்டியல் போடும் போது நிச்சயம் இடம் பெறும் மகத்தான திட்டம் தான் ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தர்மபுரி விழாவின் காணொளி முதல்வர் மு.க.ஸ்டாலின் சுவாரஸ்ய பேச்சு
தருமபுரி மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மக்களிடையே உரையாற்றினார். அப்போது., தமிழக அரசின் சார்பில் நடைபெறக்கூடிய பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் திட்டப் பணிகளை தொடங்கி வைக்கக்கூடிய அந்த நிகழ்வு, பல்வேறு அடிக்கல் நாட்டு விழாக்களையும் நடத்தக்கூடிய அந்த நிகழ்ச்சி, இப்படி பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பழங்காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட தருமபுரியில் - கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் வாழ்ந்த தருமபுரியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரைக்கும், காணொலி விழாவில் இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். தருமபுரி மாவட்டம் என்றாலே இரண்டு விஷயங்களை நாம் மறக்க முடியாது. ஒன்று தலைவர் கலைஞரால் உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் தருமபுரியில்தான் முதல் முதலாக தொடங்கப்பட்டது. இன்னொன்று என்னவென்றால், என்னுடைய மேற்பார்வையில் நடந்த ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம். சமூகத்தின் சரி பாதியான மகளிர் இனம், தனது சொந்தக் காலில் நிற்க வேண்டும் - பொருளாதாரத் தன்னிறைவு பெற்றவர்களாக மகளிர் வாழ வேண்டும் என்பதற்காகத் தான் தலைவர் கலைஞர் அவர்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களை தருமபுரி மாவட்டத்தில் முதன்முதலாக தொடங்கி வைத்தார்கள். அந்தத் திட்டத்தின் தொடக்கவிழா நடந்தது முதன்முதலில் தருமபுரியில் தான். இங்கு நடந்த விழாவிற்கு கலைஞர் அவர்களே நேரடியாக வந்து மகளிருக்கு கடன் வழங்கும் அந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.