துள்ளி குதித்த மீன்கள் ; திண்டுக்கல்லில் களைகட்டிய மீன்பிடி திருவிழா!

ETVBHARAT 2025-05-18

Views 7.3K

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பூசாரிப்பட்டியில் 50 ஏக்கர் பரப்பளவில் தாமரை கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் உள்ள நீர் வற்றியவுடன், அதில் உள்ள மீன்களை கிராம மக்கள் அனைவரும் கட்டணம் ஏதுமின்றி பிடித்துக் கொள்ளும் வகையில், ஆண்டுதோறும் சமத்துவ மீன்பிடி திருவிழா நடத்துவது வழக்கம்.  

அந்த வகையில், தற்போது கண்மாயில் நீர் குறைந்துள்ளதால், மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு பூசாரிப்பட்டி கிராம நிர்வாகம் சார்பில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக அனைத்து சுற்றுவட்டார கிராமங்ளுக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அறிவிப்பின்படி, இன்று (மே 18) காலை 5:30 முதல் 6 மணி வரை நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில்  சிறுகுடி, பூசாரிப்பட்டி, நல்லகண்டம், இந்திராநகர், புதுப்பட்டி, லட்சுமிபுரம், தேத்தாம்பட்டி, மஞ்ச நாயக்கன்பட்டி, குப்பப்பட்டி, ஒடுகம்பட்டி, எட்டயம்பட்டி, அணை மலைப்பட்டி உள்ளிட்ட 18 பட்டி கிராம மக்கள் மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

சமத்துவ மீன்பிடி திருவிழாவில், ஒரே நேரத்தில் ஒற்றுமையாக அனைவரும் கச்சா, வலை, கூடை மற்றும் ஊத்தா (மீன்பிடி கூடைகள்) கொண்டு கண்மாயில் இறங்கி ஜிலேபி, குரவை, ரோகு, பாப்லெட் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். கிடைத்த மீன்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS