சூரபத்மனை வதம் செய்ய முருகனுக்கு வேல் கொடுத்த வெயிலுகந்த அம்மன்: களைகட்டிய திருத்தேரோட்டம்!

ETVBHARAT 2025-08-11

Views 12

தூத்துக்குடி: திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் திருக்கோயில் ஆவணி உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.  

திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே வெயிலுகந்த அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சூரபத்மனை வதம் செய்த கந்தனுக்கு அன்னை பார்வதி காட்சி கொடுத்த தலம். சூரசம்ஹாரம் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் இரவு முருகப் பெருமான், சூட்சும உருவில் இக்கோயிலுக்கு வந்து அன்னைக்கு பூஜை செய்து, அருளாசி பெற்று வேல் வாங்கிச் சென்றதாகவும் ஐதீகம் உள்ளது.

ஆகையால் வேல் ஈந்த அம்மன் என்ற சொல் ‘வேலீந்த அம்மன்’ என்றாகி. பின் ‘வெயிலுகந்த அம்மன்’ என மாறியதாக கூறப்படுகிறது. தனது அன்னைக்கு நித்திய பூஜை செய்வதற்காக பாரசைவர்களை சுப்பிரமணிய சுவாமியே நியமித்ததாக வரலாறு உள்ளது. அன்று முதல் அம்பாளுக்கு பாரம்பரியமாக யாமள ஆகம முறைப்படி பாரசைவர்கள் நித்திய பூஜை செய்து வருகின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் முருகனுக்கு ஆவணி மற்றும் மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களுக்கு முன் வெயிலுகந்த அம்மனுக்கு 10 நாள் உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு ஆவணி உற்சவம் ஆகஸ்ட் 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் இன்று விழாவின் சிகர நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. 

இதற்காக அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, வெயிலுகந்த அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். அவருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து காலை 6.30 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். அதன் பின்னர் பக்தர்கள் கோஷம் முழங்க திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்குரத வீதிகளிலும் திருத்தேர் பவனி வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS