பெரம்பலூர்: தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரை பயணமாக நாளை (செப்.13) திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு வர உள்ளார். அவரை வரவேற்கும் விதமாக பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் என்ற பட்டதாரி இளைஞர் சாயத்தை உதட்டில் பூசி முத்தமிட்டபடி விஜய்யின் உருவப்படத்தை வரைந்துள்ளார்.
முதலில் ஆறுக்கு எட்டு அடி (6x8) உயரம் கொண்ட கேன்வாஸில் விஜய்யின் உருவப்படம் வரையப்பட்டது. பின், வரையப்பட்ட தடயங்களுக்கு மேல் உதடுகளை பயன்படுத்தி 2,000 முத்தங்களை கொண்டு அந்த படத்துக்கு மதியழகன் நிறமூட்டி உள்ளார். சிவப்பு வண்ண சாயத்தில் உதடுகளை நனைத்து சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த படமானது வரையப்பட்டது.
இதுகுறித்து பேசிய மதியழகன், "நான் ஏற்கெனவே வரைவதில் கலாம் புக் ஆஃப் ரெகார்ட், இந்தியா புக் ஆஃப் ரெகார்ட் உள்ளிட்ட சாதனைகளை செய்துள்ளேன். எனக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும் அதனால், இந்த முயற்சியில் இறங்கினேன். இந்த முயற்சிக்கு தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்” என்றார்.