தஞ்சாவூர்: மழை நீரில் மூழ்கிய பயிர்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கும்பகோணத்தில் உள்ள சோலையப்பன் தெரு, பேட்டை வடக்கு, ஆலடித்தெரு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 50 ஏக்கர்களுக்கு கரும்பு, நெல், வாழை மற்றும் பசு தீவனப்புல் ஆகியவை சாகுபடி செய்யப்பட்டிருந்தன. அவை இந்த மாதத்தில் அறுவடைக்கு தயாராகி இருந்தனர்.
இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை காரணமாக கடந்த ஒரு வாரமாக தஞ்சையில் கனமழை பெய்தது. அதில் நீர்நிலைகள் நிரம்பி வழிந்தது. விவசாய நிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து பயிர்களை மூழ்கடித்துள்ளன. அதனால், பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், விவசாயிகளுக்கு ரூபாய் 40 லட்சம் அளவிற்கு இதுவரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அரசு உடனடியாக நிவாரண வழங்க கோரியும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்ட துணை செயலாளர் ஆர்.செந்தில் குமார், “மழை விட்டு ஒரு வாரம் ஆன நிலையிலும் இதுவரை தேங்கியுள்ள மழை நீர் வடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படவில்லை. அரசு மழை நீரைப் போர்க்கால அடிப்படையில் வெளியேற்ற வேண்டும். உரிய நிவாரணம் அறிவிக்க வேண்டும்” என்றார். அடுப்பு, சமையல் பாத்திரங்களுடன் உணவு சமைத்து சாப்பிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.