கோயம்புத்தூர்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மத்திய பண்ணை வளாகத்தில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழகத்தின் பொறுப்புத் துணைவேந்தர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த பொங்கல் நிகழ்ச்சியில் வள்ளி கும்மி ஆட்டம், கும்மி ஆட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
இதில் வள்ளி கும்மி கலைஞர்களுடன் பல்கலைக்கழக பணியாளர்களும் சேர்ந்து நடனமாடினர். விழாவின் முக்கிய நிகழ்வான பட்டி மிதிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பால், தயிர், நவதானியம், மஞ்சள், பன்னீர், சந்தனம், குங்குமம், கோமியம் ஆகிய 9 பட்டி தொட்டிகள் அமைக்கப்பட்டு பசு மாடு அழைத்து வரப்பட்டு பட்டிகளில் விடப்பட்டது. அப்போது நவதானிய பட்டியில் மாடு முதலில் கால் வைத்தது. நவதானியத்தில் முதலில் கால் வைத்ததால் இந்த ஆண்டு விவசாயம் உணவு உற்பத்தி செழிப்பாக இருக்கும் என்று பல்கலைக்கழக ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பல்கலைக்கழகத்தின் பொறுப்புத் துணைவேந்தர் சுப்பிரமணியம், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது என்றும், உழவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.