மாயூரநாதர் ஆலயத்தில் 1000 லிட்டர் நெய்யில் சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

ETVBHARAT 2026-01-15

Views 3

மயிலாடுதுறை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாயூரநாதர் ஆலயத்தில் அதிகாலையே நடை திறக்கப்பட்டு அம்பாளுக்கும், சுவாமிக்கும் 1000 லிட்டர் நெய் அபிஷேகம் நடைபெற்றது. 

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய கோயில் என்றழைக்கப்படும் மாயூரநாதர் ஆலயம் அமைந்திருக்கிறது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இந்த தலத்தில் தான் சமயக்குரவர்களால் தேவாரப் பாடல் பாடப்பெற்றது. இங்கு அம்பாள் மயில் உருவில் இறைவனை பூஜித்து, மயில் உரு நீங்கி சாபவிமோசனம் அடைந்ததாக புராணம் கூறுகிறது.

இந்த கோயிலில்தான் 160 அடி உயரத்தில் ஒன்பது நிலை கொண்ட ராஜகோபுரம் அமைந்திருக்கிறது. அபயாம்பிகை அம்மன் சிவனை மயில் உருவில் பூஜித்து மயில் உரு நீங்கியதால் மகிழ்ந்து சிவனுக்கு தன் கையால் நெய் அபிஷேகம் செய்யப்பட்டதாக மாயூரப்புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய பல்வேறு சிறப்புகள் உடைய இக்கோயிலில் பொங்கல் திருநாளன்று மாயூரநாதர் நற்பணி மன்றம் சார்பில் மாயூரநாதசுவாமி மற்றும் அருள்மிகு அபயாம்பிகை அம்பாளுக்கு நெய் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 26வது ஆண்டாக இந்த ஆண்டும் நெய் அபிஷேகம் நடைபெற்றது. கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு, விரதமிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களால் வழங்கப்பட்ட 1000 லிட்டர் நெய் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

மேலும், பால், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டும் மகா அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் அபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்று வழிபாடு நடத்தினர். தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சோடச தீபாரதனை, மஹா தீபாராதனை நடைபெற்று, அபிஷேகம் செய்யப்பட்ட நெய் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தெய்வ தரிசனம் செய்தனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS