2003-ம் ஆண்டு மே மாத பகல் வேளை. சென்னை நகரெங்கும் ஒரே பரபரப்பு. பிரபல தயாரிப்பாளர் ஜிவி தூக்குப் போட்டு தற்கொலை என்ற செய்தி தீயாய் பரவியது. ஜிவி வீடு இருந்த சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை முழுக்க மக்கள், சினிமாக்காரர்கள். அதுவரை ஜிவியின் படங்களைப் பார்த்து அவர் மீது சினிமாக்காரர்கள் கொண்டிருந்த பிரமாண்ட இமேஜ், அவருக்கிருந்த மலையளவு கடன்களைப் பார்த்து பரிதாபமாக மாறியது. பைனான்சியர் மதுரை அன்புச் செழியனிடம் அவர் ஏகத்துக்கும் கடன்கள் வாங்கியிருந்தார். ரொம்ப நாணயமாக அவர் திருப்பிக் கொடுத்தாலும், தளபதிக்குப் பிறகு அவர் தயாரித்த படங்கள் வரிசையாக அடி வாங்கின. கடைசியாக அவர் தயாரித்த சொக்கத் தங்கம் ஓரளவு போனாலும், அது ஜிவியின் கடன்களை அடைக்கப் போதுமானதாக இல்லை. ஒரு கட்டத்தில் ஜிவி கனவிலும் நினைக்காத அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. அவர் மனைவி கொடைக்கானலில் சிறைப் பிடிக்கப்பட்டார். அடுத்த நாள் தூக்கில் தொங்கினார் ஜிவி. ஆனால் அன்புச் செழியன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காரணம் வெளிப்படையாக ஜிவி கடும்பத்தினர் புகார் தரவில்லை.