மதுரை அருகே ஒரு தலை காதலால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட 9ம் வகுப்பு மாணவி 11 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் பரிதாமாக உயிரிழந்தார் .
மதுரை திருமங்கலத்தை அடுத்த நடுவாக்கோட்டையைச் சேர்ந்த மணிபாண்டி, பேச்சியம்மாள் என்ற தம்பதியின் மகள் சித்ராதேவி. 14 வயதான சித்ராதேவி திரளியை அடுத்த அச்சம்பட்டியில் உள்ள அரசுப்பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவரை அதே பகுதியை சேர்ந்த சந்தானம் என்பவரின் மகன் பாலமுருகன்ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார். பலமுறை தனது காதலை கூறியும் சிறுமி ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த பாலமுருகன் கடந்த 16ம் தேதி மாலை, மாணவி பள்ளி முடித்து பேருந்துக்காக காத்திருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த அவர் மாணவியின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டான் அவனை சுற்றி வளைத்த போலீசார் அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்
தீவைக்கப்பட்ட மாணவி அலறி துடித்ததை கண்ட அக்கம்பத்தினர், தீயை அணைத்து சித்ராதேவியை திருமங்கலம் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்த 11 நாட்களாக தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த மாணவி, இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரழந்தார். மேலும் மாணவியின் உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்