சேலம் - சென்னை 8 வழி சாலை திட்டத்திற்கு எதிப்பு தெரிவித்த விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
சேலம் - சென்னை இடையே 8 வழி சாலை அமைக்கும் திட்டத்திற்கு பல்வேறு கட்சிகள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் - சென்னை இடையே 8 வழி சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் 36 கிலோமீட்டர் தொலைவிற்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாரப்பட்டி பகுதியில் எட்டு வழிசாலை திட்டத்திற்காக நில அளவீடு பணி நடைபெற்றது. நிலம் அளவீடும் பணிக்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் எட்டு வழிச்சாலைக்கு நிலத்தை தர மறுத்தனர். இதனால் விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டனர். அப்போது பயத்தில் சிதறி ஓடிய விவசாயிகளை காவல்துறையினர் துரத்திப் பிடித்து காவல்துறை வாகனத்தில் குண்டுகட்டாக தூக்கி போட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அரசின் திட்டத்திற்காக பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறை பொது மக்கள் மீது அடக்குமுறையை கையாள்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
des: Salem - Chennai 8 road road project