கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கேரளா பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளது. மாநிலத்திற்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் இழப்பு நேரிட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தை சீரமைக்க பல்வேறு தரப்பில் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் மழை குறைந்து, வெள்ளம் வடிய தொடங்கியுள்ளதாகவும், முகாம்களில் தங்கியுள்ள மக்கள் மெல்ல மெல்ல வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர் என தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட வசதிகளை மீண்டும் மேம்படுத்த ஏராளமான நிதி தேவைப்படுகிறது என்ற பினராயி விஜயன் மாநிலத்தின் மறுக்கட்டமைப்புக்காக கேரளாவில் வாழும் மக்களும், வெளிநாடுகளில் வாழும் கேரள மக்களும் தங்களின் ஒருமாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஒரு மாத ஊதியத்தை வழங்கவது கடினமானது என்றாலும், ஒவ்வொரு மாதத்தில் 3 நாட்கள் ஊதியத்தை மாநிலத்தின் மறுகட்டமைப்புக்காக வழங்கலாம் என்றும் ஆலோசனை கூறினார்