அதே எரிவாயு... அதே அதிகார கும்பல்.. அழிக்கப்பட்ட அமெரிக்க நெடுவாசல்..!
இது இப்படித் தான் தொடங்கியது. அமெரிக்காவின் பூர்வகுடி இனத்தைச் சேர்ந்த லா டோன்னா பிரேவ் என்கிற முதியவர், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் மிசோரி கடற்கரையை ஒட்டி தன் கூடாரத்தை அமைக்கிறார். அமெரிக்க அரசிற்கும், அது கொண்டு வந்திருக்கும் டகோடா பைப்லைன் திட்டத்திற்கும் எதிரான பதாகைகளை கூடாரத்தைச் சுற்றி அமைக்கிறார்.
நெடுவாசல் அமெரிக்கா டகோடா ஹைட்ரோ கார்பன்
"பல்லாயிரம் ஆண்டுகளாய், பரம்பரை பரம்பரையாய் வாழ்ந்த நாட்டைப் பிடுங்கினீர்கள். இனத்தை அழித்தீர்கள். இன்று, எங்கோ ஒதுங்கி வாழும் இடத்தையும், நாங்கள் குடிக்கும் நீரையும் அழிக்க முயல்கிறீர்கள். இதற்கு ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டோம்..."
என்ற அவரின் போராட்டக் குரலைக் கேட்டு, கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கூடுகிறது. கூடாரம் அமைக்கிறது. ஒரு கட்டத்தில் 50 ஏக்கர் பரப்பளவிலான அந்த நிலத்தில் பத்தாயிரம் பூர்வகுடிகள் கூடாரங்கள் அமைத்துப் போராடத் துவங்கினார்கள். "தி ஸ்டாண்டிங் ராக் ப்ரொடஸ்ட்" (The Standing Rock Protest) என்றழைக்கப்படும் இந்தப் போராட்டம் அமெரிக்க வரலாற்றின் முக்கியப் போராட்டங்களில் ஒன்று.
பூமிக்கடியிலிருந்து எரிவாயுக்களை எடுத்து... பூமிக்கடியிலேயே பெரிய பைப்லைனை உருவாக்கி அதை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கடத்துவது தான் "டகோட்டா பைப்லைன் திட்டம்". இது செயல்படுத்தப்படும் மிசோரி, மிசிசிபி ஆறுகள் மற்றும் ஓஆஹி ஏரி ஆகிய பகுதிகள் பூர்வகுடிகளின் வாழ்வும், வாழ்வாதாரமும், வரலாறும் புதைந்து கிடக்கும் இடங்கள்.
"இந்தக் குழாய் மூலம் ஒரு நாளைக்கு 5,70,000 பேரல்கள் அளவிலான எரிவாயு கடத்தப்படும். சிறிதளவேனும் சிந்தினால் கூட 5 நொடிகளில் ஒரு பள்ளிக்கூடமே தரைமட்டமாகிவிடும். 50 நிமிடங்களில் மிசோரி ஆறு முற்றிலும் நாசமாகிவிடும்." என்று இதை எதிர்க்கும் பூர்வகுடிகள் சொல்கிறார்கள்.