சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் அணை இன்று காலை 104 அடியை தொட்டதால் அதிகப்படியான உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணைக்கு வரும் உபரி நீரை வெளியேற்ற பொதுப்பணித் துறையினர் முடிவு செய்தனர். அதன்படி தற்போது அணையில் நீர்மட்டம் 104.24 அடியாக உள்ளது (மொத்தம் 105 அடி) 32.16 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. (மொத்தம் 32.8 டி.எம்.சி) அணைக்கு நீர்வரத்து 10812 கன அடியாக உள்ள நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் 1800 கன அடியும் பவானி ஆற்றில் 9000 கன அடி என மொத்தம் 10800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சற்று முன்னர் பவானிசாகர், சத்தியமங்கலம், தொட்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பவானிசாகர் பேரூராட்சியின் சார்பில், தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும், துணி துவைக்கவோ, குளிக்கவோ பொதுமக்கள் யாரும் பவானி ஆற்று பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.