திருச்சி: இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி பெருவிழா ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படுவது ஶ்ரீரங்கம் கோயில் ஆகும். தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெறும்.
மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு வரும் டிசம்பர் 30-ம் தேசி நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு சுமார் மூன்று லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.