மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் பல லட்ச ரூபாய் மோசடி புகார், விசாரணை அடிப்படையில் ஒன்றிய ஆணையர், பொறியாளர்கள் உள்ளிட்ட 7 பேர் பணியிடை நீக்கம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பரபரப்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய நிதியின் கீழ் நடைபெற்ற பல்வேறு பணிகளில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகவும், சாலை உள்ளிட்ட பல நலத்திட்ட பணிகள் வேலை செய்யாமலே பணம் கையாடல் செய்து இருப்பதாகவும், ஒரே பணியை இரண்டு பெயரில் பில் போட்டு மோசடி செய்ததாகவும் ஊராட்சி ஒன்றிய தலைவர் காமாட்சி மூர்த்தி என்பவர் மீது கவுன்சிலர்கள் ஆதாரத்துடன் குற்றம் சாட்டினர். இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும் ஒரு கோடியே 38 லட்சம் ரூபாய் வரையில் மோசடி நடைபெற்று உள்ளதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து சென்னை கண்காணிப்பு பொறியாளர், சரவணகுமார் மற்றும் திருவாரூர் மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா ஆகியோர் இரண்டு நாட்கள் விசாரணை மேற்கொண்டனர். அதில் பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விசாரணை அறிக்கை அடிப்படையில் அப்போது ஊராட்சி ஒன்றிய ஆணையராக பணியாற்றிய சரவணன், ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர்கள் கிருஷ்ணகுமார் தெய்வயானை பூரணச்சந்திரன், ஒன்றிய மேற்பார்வையாளர்கள் அன்புசெழியன் அகிலா, ராஜ்குமார் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் திருமதி லலிதா பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இரண்டு உதவி கோட்டப் பொறியாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.