ஒடிசா ரயில் விபத்து; தமிழர்களுக்கு உதவ நடவடிக்கைகளை துரிதப்படுத்திய தமிழக முதல்வர்!
ஒடிசாவில், ஜூன் 2 -ம் தேதி சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 230-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளதோடு, ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும், தேவைப்படின், தமிழ்நாட்டின் மருத்துவக் குழு மற்றும் இதர உதவிகளை அனுப்பி வைப்பதாகவும் ஒடிசா முதலமைச்சரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.
விபத்தில் பலியான தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சமும் காயம்பட்டவர்களுக்கு தலா 50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்திருக்கிறார் முதல்வர். மேலும் மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ் நாட்டினருக்குத் தேவையான உதவிகளைச் செய்திட விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோரும் ஐ ஏஎஸ் அதிகாரிகள் சகிதம் ஒடிசாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.