மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 25 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிராவின் யவத்மாலில் இருந்து புனே நோக்கி தனியார் சொகுசு பேருந்து சம்ருத்தி மகாமார்க் விரைவுச் சாலையில் சென்றுகொண்டிருந்தது. அதிகாலை 2 மணி அளவில் புல்தானா என்ற இடத்தில் பேருந்து வந்துக்கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது, பயணிகள் அனைவரும் தூக்கத்தில் இருந்துள்ளனர். பேருந்து தீப்பற்றிக்கொண்டதை உணர்ந்த பயணிகள் அலறியடித்து எழுந்து தப்பிக்க முயன்றனர். ஆனால், அவர்களால் தப்பிக்க முடியவில்லை. பேருந்தின் கதவு மூடப்பட்டிருந்தது. சட்டென தீ பேருந்து முழுவதும் பற்றிக்கொண்டதால் விரைந்து வெளியேற முடியாத நிலையில் இந்த தீ விபத்தில் சிக்கி 25 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். ஆபத்தான நிலையில் இருக்கும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.