குலசை தசரா திருவிழா! கடல் போல் திரண்டு காப்பு கட்டி அம்மனை வழிபட்ட பக்தர்கள்!

ETVBHARAT 2025-09-23

Views 1

தூத்துக்குடி: கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு அணிந்து அம்மனை வழிபட்டனர்.

உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் வெகு விமரிசையாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. நவராத்திரி தினத்தை முன்னிட்டு கொண்டாடப்படும் இந்த தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, முதன் முறையாக பிரம்ம முகூர்த்தத்தில் இந்த கொடியேற்றமானது இன்று தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1.00 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு காலை 3.00 மணிக்கு கொடி பட்டம் ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலை 5.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் உள் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கொடி மரத்துக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் திருகாப்பு அணிந்து அம்மனை வழிபட்டனர். மேலும், இந்த திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டனர். 

கொடியேற்றத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு கோலத்தில் எழுத்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 2-ஆம் தேதி நள்ளிரவில் கோயில் அருகே அமைந்துள்ள கடற்கரையில் நடைபெறுகிறது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS