தஞ்சையில் உள்ள சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தங்கி பயிலும் குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் சுதந்திர தின விழாவையொட்டி திரைப்பட நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சிறுவர்கள் மத்தியில் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தி அவர்களை மகிழ்வித்தார். ஓடி விளையாடு பாப்பா என்ற பாடலை பாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய சிறுமிக்கு ரோபோ சங்கர் 500 ரூபாய் சிறப்பு பரிசாக வழங்கி மாணவியை பாராட்டினார்.
தஞ்சை மேம்பாலம் அருகில் சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் ஆதரவற்ற தாய் தந்தை இழந்த மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் தங்கி பயின்று வருகின்றனர். எட்டாம் வகுப்பு வரை உள்ள இந்த இல்லத்தில் 92 மாணவ மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். சுதந்திர தின விழாவையொட்டி இந்த இல்லத்தில் சிறப்பு தஞ்சை நகர காவல்துறை சார்பில் நிகழ்வு நடைபெற்றது. மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் திரைப்பட நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் நகைச்சுவை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் பல நடிகர்கள் நடிகைகள் குரலில் பேசியும் ரயில் விமானம் இவற்றின் சப்தங்கள் எழுப்பியும் சிறுவர்களை மகிழ்வித்தார். மாணவி ஒருவர் ஓடி விளையாடு பாப்பா என்ற பாடலை முழுமையாகப் பாடி அசத்தி அனைவரது பாராட்டையும் பெற்றார் அவருக்கு ரோபோ சங்கர் 500 ரூபாய் சிறப்பு பரிசாக வழங்கி பாராட்டினார். கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார்.