கரூரில் வழக்கறிஞர் பிரபாகர் என்பவரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்க முயன்ற க.பரமத்தி காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணனை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பதாக தகவல்.
கரூர் மாவட்டம் க.பரமத்தியை அடுத்த காட்டு முன்னூரில் வசிப்பவர் வழக்கறிஞர் பிரபாகரன். இவரது தாய், தந்தைக்கும், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நேற்று மாலையில் இது தொடர்பாக விசாரிப்பதற்காக க.பரமத்தி காவல் நிலையத்திற்கு வழக்கறிஞர் பிரபாகரன் சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த காவலர்கள் மூலம் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணனிடம் அனுமதி பெற்று அவரது அறைக்குச் சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த ஆய்வாளர் ராதாகிருஷ்ணனிடம் என் தந்தை கொடுத்த புகார் தொடர்பாக காவல் துணை கண்காணிப்பாளர் பார்க்க சொன்னதால் வந்தேன் என கூறியதற்கு தகாத வார்த்தைகளால் திட்டியும், தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்க கூட்டரங்கில் அவசர நிர்வாகக் குழு கூட்டம் கூட்டப்பட்டது. அதில் எடுத்த முடிவின்படி க.பரமத்தி காவல் நிலைய ஆய்வாளர் ராதாகிருஷ்ணனை கண்டித்து இன்று ஒருநாள் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருந்தனர். இதற்கிடையில் இது தொடர்பாக வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளுடன் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.